கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வேலூரில் முதல்வர் ஆய்வு

முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் ஒவ்வொரு மாவட்டமாக நேரில் சென்று அந்த மாவட்டங்களில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்து, முடிக்கப்பட்ட பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டங்களை தொடங்கி வைத்தும் வருகிறார்.

அதேபோன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் எடுக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வுசெய்து ஆலோசனை வழங்கி வருகிறார். அதன் ஒருபகுதியாக வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் வருகிற 20-ந் தேதி வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது.

இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்துகொண்டு வளர்ச்சி பணிகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்கிறார். அப்போது பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.

மேலும் 3 மாவட்டங்களிலும் முடிக்கப்பட்ட பணிகளை திறந்துவைத்து, புதிய திட்டங்களை தொடங்கிவைக்கிறார். இந்த ஆய்வு கூட்டத்தில் கலெக்டர்கள் சண்முகசுந்தரம் (வேலூர்), சிவன்அருள் (திருப்பத்தூர்), பிரியதர்ஷினி (ராணிப்பேட்டை) மற்றும் 3 மாவட்ட அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.