12ம் வகுப்பு மாணவர்கள் மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை: பிளஸ் 2 மறுகூட்டல் , இன்று முதல் விண்ணப்பிக்கலாம் .... தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 8-ம் தேதி வெளியானது. அதன்படி தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.03% பேர் தேர்ச்சி பெற்றனர். அதில் மாணவர்கள் 91.45% , மாணவிகள் 96.38% தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். இந்த ஆண்டும் வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகள் 4.93% அதிகம் தேர்ச்சி பெற்றனர்.

தமிழகத்தில் அதிகளவில் தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் விருதுநகர் முதலிடம் பெற்றது. தமிழகத்தில் 326 அரசு மேல்நிலைப்பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்று சாதனை படைத்து உள்ளன. இந்நிலையில் பிளஸ் 2 தேர்வு எழுதியவர்களில் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு நேற்று முதல் நகல் வெளியிடப்படுகிறது.

இதையடுத்து மாணவர்கள் தங்களின் விடைத்தாள் நகல்களை www.dge.tn.gov.in எனும் இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதன்பிறகு மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் அதே இணையதள பக்கத்தில் விண்ணப்பப் படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

இதனை பூர்த்தி செய்து 2 நகல்கள் எடுத்து இன்று முதல் வருகிற ஜூன் 3-ம் தேதி வரை சம்பந்தபட்ட மாவட்ட தேர்வு உதவி இயக்குநர் அலுவலகங்களில் சென்று ஒப்படைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மறு கூட்டலுக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறு மதிப்பீடு பாடம் ஒன்றுக்கு ரூபாய் 500, மறு கூட்டல் பாடம் ஒன்றுக்கு ரூபாய் 205 கட்டணமாக செலுத்த வேண்டும் எனவும் உயிரியல் பாடத்திற்கு மட்டும் ரூபாய் 305 கட்டணமாக செலுத்த வேண்டும் எனக்குவம் அறிவிக்கப்பட்டுள்ளது.