மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் வரும் 28ம் தேதி முதல்வர் ஆலோசனை

மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் வரும் 28ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் புதிதாக 3 ஆயிரத்து 057 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 03 ஆயிரத்து 250 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 59 ஆயிரத்து 432 ஆக உயர்ந்துள்ளது. ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 858 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா தொற்று பரவல் முழுமையாக கட்டுக்குள் வராத நிலையிலும் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை கணக்கில் கொண்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், வரும் 28ம் தேதி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்த ஆலோசனையின்போது பண்டிகை காலம் என்பதால், நோய் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் கூடுதல் தளர்வுகளை அறிவிப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்படலாம் எனத்தெரிகிறது.