மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இன்று தலைமைச்செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு வரும் 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் தற்போது மாநில அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. முக்கியமாக மாநிலத்திற்குள் பொது போக்குவரத்து மற்றும் ரெயில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டு உள்ளன.

இதுபோன்ற தளர்வினால் கொரோனா தொற்று அதிகம் பரவும் என்று கருதி, வழிகாட்டி விதிமுறைகளை அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் அவற்றை மீறுவதை குற்றம் என்று அறிவித்து அபராத தொகையையும் அதிகரித்து அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச்செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்துள்ள நிலையில் அதற்கேற்ப மருத்துவ வசதிகளை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கிறார். ஊரடங்கு தளர்வுகளால் கொரோனா அதிகரித்தால் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கை குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

ஆலோசனையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.