மும்மொழி கொள்கை இடம்பெற்றிருப்பது வேதனை அளிக்கிறது; தமிழக முதலவர் அறிக்கை

தமிழகத்தில் மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கைக்கு எதிர்கட்சிகள் உள்பட பல அரசியல் கட்சிகள் பல்வேறு கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். ஆனால் இதில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? என்பது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் புதிய கல்விக்கொள்கை, பள்ளிகளை திறப்பது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

இதில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், தலைமை செயலாளர் க.சண்முகம், முதல்-அமைச்சரின் செயலாளர்களில் கல்வித்துறையை கவனித்துக்கொண்டு இருக்கும் எஸ்.விஜயகுமார், உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா, பள்ளிக்கல்வி துறை செயலாளர் தீரஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு இடமில்லை. இருமொழி கொள்கையே தொடரும். புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கை இடம்பெற்றிருப்பது வேதனை, வருத்தம் அளிக்கிறது. தமிழக மக்களின் உணர்வுகளை ஏற்று மும்மொழி கொள்கையை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

தமிழ் மொழிக்கோ, தமிழர்களுக்கோ பாதிப்பு ஏற்பட்டால் அதனை களைய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும். அந்தந்த மாநிலங்கள் தங்களின் கொள்கைக்கு ஏற்ப செயல்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.