சேலத்தில் இரண்டு பாலங்களை தமிழக முதல்வர் இன்று திறந்து வைக்கிறார்!

சேலத்தில் இரண்டு அடுக்கு மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்காக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார்.

சேலத்தில் நெடுஞ்சாலைகளிலும் அதனுடன் கூடிய இணைப்பு சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக சேலம் குரங்குசாவடி முதல் புதிய பேருந்து நிலையம் வழியாக அண்ணா பூங்கா வரை 5.01 கிமீ நீளத்துக்கு புதிதாக இரண்டு அடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டு வந்தது.

இதேபோல, சேலத்தின் வணிகப் பகுதியான லீ பஜார்- மார்க்கெட் ரயில் நிலையத்துக்கு இடையே, ரயில் பாதையால் போக்குவரத்து பாதிக்கப்படாமல் இருக்க, மற்றொரு மேம்பாலமும் கட்டப்பட்டு வந்தது. சேலம் மக்களின் நீண்ட கால பிரச்சினைகளுக்குத் தீர்வாக கட்டப்பட்டு வந்த இரு பாலங்களின் கட்டுமானப் பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்தன.

இதையடுத்து, சேலத்தில் இன்று (11-ம் தேதி) காலை நடைபெறும் விழாவில், இவ்விரு பாலத்தையும் மக்கள் பயன்பாட்டுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி திறந்து வைக்கிறார். மேலும், முடிவுற்ற திட்டப் பணிகளையும் திறந்து வைக்கிறார்.

நாளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மேட்டூர் அணையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீரை திறந்து வைக்கிறார்.