வேலூரில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் இன்று ஆய்வு

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு செய்கிறார்.

தமிழகத்தில் கொரோனா தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை 3 லட்சத்து 55 ஆயிரத்து 449 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாநிலத்தில் சிகிச்சை பலனின்றி இதுவரையில் 6,123 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரையில் தமிழகத்தில் 2 லட்சத்து 96 ஆயிரத்து 171 பேர் பூரண குணம் அடைந்து உள்ளனர். தற்போது சிகிச்சையில் 53 ஆயிரத்து 155 பேர் உள்ளனர்.

இந்நிலையில், கொரோனா தடுப்பு பணிகளை மாநில மாற்றும் மாவட்ட அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் தற்போது மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது.

இதனை தொடர்ந்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து இன்று ஆய்வு செய்கிறார். கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்தபின் விவசாயிகள், தொழில்துறையினருடன் முதலமைச்சர் ஆலோசனை செய்கிறார்.

கோவை, சேலம், ஈரோடு, கள்ளக்குறிச்சி, திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ஏற்கனவே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்துள்ளார்.

இன்று பிற்பகலில் தர்மபுரியில் மாவட்ட வளர்ச்சி பணிகள், கொரோனா தடுப்பு பற்றியும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்கிறார்.