கிறிஸ்துமஸ் திருநாளையொட்டி முதலமைச்சர் கிறிஸ்துமஸ் வாழ்த்து

இயேசுபிரான் அவதரித்த நன்னாளான கிறிஸ்துமஸ் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அன்பின் வடிவமான இயேசுபிரான் அவதரித்த நன்னாளான கிறிஸ்துமஸ் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இயேசுபிரான் பிறந்த இத்திருநாளில், அவர் போதித்த அன்பு, தியாகம், இரக்கம், பொறுமை, எளிமை, ஈகை போன்ற உயரிய நெறிகளை மக்கள் தங்கள் வாழ்வில் பின்பற்றி, வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையாய் சகோதரத்துவத்துடன் வாழ்ந்தால் உலகம் அமைதிப் பூங்காவாக பூத்துக்குலுங்கும்.

தமிழக அரசு, கிறிஸ்துவ மக்களின் நல்வாழ்விற்காக இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டைச் சேர்ந்த கிறிஸ்துவப் பெருமக்கள் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்வதற்கு நிதியுதவி வழங்கும் சிறப்பு திட்டம், தமிழ்நாட்டிலுள்ள கிறித்துவ மதத்தைச் சார்ந்த ஏழ்மை நிலையிலுள்ள, ஆதரவற்ற விதவைகள், வயதான பெண்கள் நலனுக்காக கிறித்துவ மகளிர் உதவும் சங்கங்கள் மூலம் நிதியுதவி வழங்குதல் மற்றும் தையல், பூ-வேலைபாடுகள், காலணிகள், கைவினை பொருட்கள் செய்வதற்கான பயிற்சிகள் வழங்குதல், கிறிஸ்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் சீரமைக்கும் பணிகளுக்காக அரசின் மானிய உதவி வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்திவருகிறது.

இயேசுபிரான் அவதரித்த கிறிஸ்துமஸ் திருநாளில், உலகெங்கும் அன்பும், அமைதியும் நிலவட்டும், நலமும் வளமும் பெருகட்டும் என்று வாழ்த்தி, கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது உளமார்ந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்களை உரிதாக்கிக்கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.