முதுநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு டிச.2-ந்தேதி கல்லூரிகள் திறப்பு

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. அதன்பின்னர் இதுவரை திறக்கப்படவில்லை. கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்பட்டது. இதையடுத்து கல்லூரிகளில், மாணவ- மாணவிகள் சேர்க்கை நடத்தப்பட்டு, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகிறது.

இதனையடுத்து வருகிற 16-ந்தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்தது. இதற்கு பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டிச.2ந்தேதி முதல் முதுநிலை இறுதியாண்டு மாணவர்களுக்காக கல்லூரி, பல்கலைக்கழகம் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

டிச.2ந்தேதி முதல் முதுநிலை இறுதியாண்டு அறிவியல், தொழில்நுட்ப மாணவர்களுக்காக கல்லூரி, பல்கலைக்கழகம் திறக்கப்படும். அனைத்து ஆராய்ச்சி மாணவர்களுக்காகவும் டிச.2-ந்தேதி கல்லூரி, பல்கலைக்கழங்கள் திறக்கப்படுகிறது.

டிசம்பர் 2ந்தேதி திறக்கப்படும் கல்லூரிகளில் மட்டும் மாணவர்களுக்கான விடுதிகள் செயல்படும். இதர வகுப்பு மாணவர்களுக்கான கல்லூரி திறப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.