இது இந்தி அரசா? அல்லது இந்திய அரசா? கமல்ஹாசன் மற்றும் வைரமுத்து கண்டனம்

சமீபத்தில் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் சார்பில் ஆன்லைன் மூலம் யோகா நேச்சுரோபதி மருத்துவர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியில் மத்திய ஆயுஷ் அமைச்சக செயலாளர் ராஜேஷ் கொடஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். தமிழகத்திலிருந்து 37 மருத்துவர்களும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மொத்தம் 350 மருத்துவர்களும் இதில் பங்கேற்றனர்.

இந்த நிலையில் ஆயுஷ் அமைச்சக செயலாளர் ராஜேஷ் கொடாஜா அவர்கள் இந்த பயிற்சியின்போது ஹிந்தியில் பேசினார். அப்போது தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் ஆங்கிலத்தில் உரையாடும்படி கோரிக்கை விடுத்தனர். ஆனால் தனக்கு ஆங்கிலம் சரளமாக தெரியாது என்றும் ஹிந்தி தெரியாதவர்கள் பயிற்சியில் இருந்து விலகிக் கொள்ளலாம் என்றும் கூறியிருந்தார்.

ஆயுஷ் அமைச்சக செயலாளரின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இதுகுறித்து கமல்ஹாசன் மற்றும் வைரமுத்து ஆகியோர் கண்டனம் தெரிவித்து தங்களது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது:-

கமல்ஹாசன் கூறுகையில், ஆயுஷ் அமைச்சக அதிகாரிகள் தமிழ் புரியாமல் எப்படி எங்கள் மருத்துவத்தைப் புரிந்து கொள்வர் என்ற கேள்வி எழுப்பாதது எம் மருத்துவர்களின் பெருந்தன்மை. அனைவருக்கும் புரியும் மொழியில் இயங்கவேண்டியது அரசின் கடமை. இது இந்தி அரசல்ல. சு என்பதை மறந்துவிட வேண்டாம். வாழிய பாரதமணித்திருநாடு.

வைரமுத்து கூறுகையில், இந்தி அறியாதார் யோகா பயிற்சியிலிருந்து வெளியேறலாம் என்று இந்திய அமைச்சகச் செயலாளர் அவமதித்திருப்பது அதிர்ச்சி தருகிறது. யோகா இந்திக்கு மட்டுமே சொந்தமா அல்லது இந்தியாவுக்கு இந்தி மட்டுமே சொந்தமா என்ற கேள்விகள் இதயத்தில் அறைவதை நிறுத்துங்கள்.