காங்கிரஸ் வயதான கட்சி - பாஜக தலைவர் நளின்குமார் கட்டீல் கிண்டல்

காங்கிரஸ் கட்சி தலைமை பதவிக்கு தலைவரை நியமிப்பதில் தற்போது கட்சிக்குள் சர்ச்சை கிளம்பியுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்திக்கு எழுதிய விவகாரம் பெரும் அதிர்ச்சி மற்றும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கர்நாடக பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் கலபுரகியில் பேட்டி அளித்தபோது, காங்கிரஸ் வயதான கட்சி என கிண்டல் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக உள்ள சோனியா காந்தி அந்த பதவியில் 6 மாதம் நீட்டிக்கப்பட்டு உள்ளார். காங்கிரஸ் வயதான கட்சி. அவர்கள் கட்சிக்கு புதிய தலைவரை நியமனம் செய்ய போவது இல்லை. சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்த போது நடந்த முறைகேடுகளை நாங்கள் வெளிகொண்டு வருகிறோம் என்று கூறினார்.

தற்போது காங்கிரஸ் ஆட்சியில் இல்லாததால் அவர்கள் மாநில மக்களிடையே அரசு பற்றி தவறான எண்ணத்தை உருவாக்க பார்க்கிறார்கள். ஆட்சியில் இல்லாத விரக்தியில் பெங்களூருவில் திட்டமிட்டு கலவரத்தை காங்கிரசார் அரங்கேற்றி உள்ளனர். திப்பு சுல்தான் குறித்து எச்.விஸ்வநாத் கருத்து கூறியுள்ளார். அது அவரது சொந்த கருத்து. அது கட்சியின் கருத்து அல்ல என நளின்குமார் கட்டீல் கூறினார்.

மேலும் அவர், நான் கர்நாடக பா.ஜனதா தலைவராக பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்து விட்டது. இந்த ஓராண்டில் எனக்கு முதல்-மந்திரி எடியூரப்பா, மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். கட்சியின் வளர்ச்சிக்காக இன்னும் தீவிரமாக பணியாற்றுவேன் என்று கூறினார்.