ஊழலில் முதல் இடத்தில் இருக்கும் கட்சி காங்கிரஸ்... உள்துறை அமைச்சர் விமர்சனம்

கர்நாடகா: ஊழலில் முதல் இடம்... காங்கிரஸ் குடும்பக் கட்சி எனவும், ஊழலில் முதல் இடத்தில் இருக்கும் கட்சி எனவும் உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சனம் செய்துள்ளார்.

காங்கிரஸ் எப்போதும் தங்களது குடும்பத்தின் நலனுக்கே முக்கியத்துவம் கொடுக்கும் எனவும் தாக்கிப் பேசியுள்ளார். இந்த ஆண்டு பேரவைத் தேர்தலை சந்திக்கவுள்ள கர்நாடகத்தில் தேர்தலின் ஒரு பகுதியாக பிரசாரம் மேற்கொண்ட அவர் இதனை தெரிவித்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாஜக தொடர்பான இரண்டு பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு பேசினார். இந்தக் கூட்டங்கள் கர்நாடகத்தின் பிடார் மற்றும் தேவனஹள்ளி நகரங்களில் நடைபெற்றன.

கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: காங்கிரஸ் அந்தக் கட்சியின் மூத்த தலைவர்களை அவமதிக்கிறது. கர்நாடகத்தின் முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவின் பிறந்த நாளில் அவருக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்து மரியாதை செலுத்தினார். அரசியல் கட்சிகள் பிரதமர் நரேந்திர மோடியிடம் இருந்து இதனைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

கட்சியின் தலைவர்கள் மதிப்பாக நடத்தப்பட வேண்டும். ஊழலில் காங்கிரஸ் முதலிடத்தில் உள்ளது. முடிவு உங்கள் கையில் இருக்கிறது. அந்நிய நேரடி முதலீட்டினை கொண்டுவர முயற்சிகளை முன்னெடுக்கும் பாஜகவிற்கு வாக்களிக்கப் போகிறீர்களா அல்லது ஊழலில் முதலிடத்தில் உள்ளவர்களுக்கு வாக்களிக்கப் போகிறீர்களா?

வான் மற்றும் வானூர்தி துறையில் கர்நாடகத்தை பாஜக முதல் இடத்துக்கு கொண்டு வந்துள்ளது. ஆனால், காங்கிரஸ் தங்களது குடும்பத்தின் நலனுக்காக மட்டுமே உழைத்துள்ளது என்றார். இந்த ஆண்டு மே மாதத்தில் கர்நாடக பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.