அரசியலுக்கு பிரதமர் மோடி ராணுவத்தை பயன்படுத்துவதாக காங்கிரஸ் தலைவர் குற்றச்சாட்டு

புதுடெல்லி: மத்திய அரசின் ராணுவத்தை பிரதமர் மோடி அரசியல் ரீதியாக தேர்தலுக்கு பயன்படுத்துவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜு கார்கே குற்றம்சாட்டியுள்ளார். அரசின் திட்டங்களை மேம்படுத்துவதற்காக நாடு முழுவதும் சுமார் 822 இடங்களில் செல்ஃபி பாயின்ட்களை அமைக்க ராணுவத்தை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது ட்விட்டர் பதிவில், “தேசத்தைக் காக்கும் நமது இந்திய ராணுவத்தின் துணிச்சலான வீரர்களின் புகழைப் பயன்படுத்தி மோடி ஜி தன்னைத் தானே விளம்பரப்படுத்திக் கொள்கிறார்.

கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத வகையில் ராணுவத்தை தேர்தலுக்கு பயன்படுத்தி மோடி அரசு செய்திருக்கிறது. அரசின் திட்டங்களை விளம்பரப்படுத்த செல்ஃபி பாயின்ட்களை அமைக்க ராணுவத்தை மோடி அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

ராணுவ வீரர்களின் வீரம் பற்றிய கதைகளுக்கு மாறாக, பிரதமர் மோடியின் உருவம், சிலை மற்றும் அவரது திட்டங்கள் போற்றப்படுகின்றன. வீரர்களின் புகழை பணயம் வைத்து ஆளும் கட்சி கண்ணியத்தை புண்படுத்தியுள்ளது,” என்றார்.