ரஷ்யா நடத்தி வரும் சர்ச்சைக்குரிய வாக்கெடுப்புக்கு கடும் கண்டனம்

உக்ரைன்: ஜி 7 நாடுகள் கடும் கண்டனம்... உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் இந்த சர்ச்சைக்குரிய வாக்கெடுப்பு ஒரு போலி வாக்கெடுப்பு என கூறி 'ஜி7' நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக 'ஜி7' நாடுகள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; ரஷ்யாவின் இந்த பொதுவாக்கெடுப்பு ஐ.நா. சாசனத்தை மீறுவதாகும். வாக்குகள் ரஷ்ய ஆதரவு அதிகாரிகளால் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இது ஒரு பிரசார பயிற்சியாகும். இதன் முடிவுகள் ஏற்கனவே ரஷ்ய அரசால் தீர்மானிக்கப்பட்டவை.

ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்த வாய்ப்பளிப்பதாக ரஷ்யா கூறினாலும் உக்ரேனிய நிலத்தை ரஷ்யா சட்டவிரோதமாக அபகரிக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே பொதுவாக்கெடுப்பு நடக்கும் ஆக்கிரமிப்பு உக்ரைன் பிராந்தியங்களில் ரஷ்ய ராணுவ வீரர்கள் வாக்கு பெட்டியை வீடு, வீடாக சென்று மக்களை மிரட்டி வாக்களிக்க செய்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.