காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களின் கொரோனா பாதிப்பு நிலவரம்

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 70 ஆயிரத்து 392 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 42 ஆயிரத்து 566 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. சென்னையை தொடர்ந்து காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களின் கொரோனா பாதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று 148 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 ஆயிரத்து 957 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 22 ஆயிரத்து 754 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 353 ஆக உள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 207 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரையில் மாவட்டம் முழுவதும் 35 ஆயிரத்து 342 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 33 ஆயிரத்து 284 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில் 595 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று மட்டும் ஒரே நாளில் 272 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40 ஆயிரத்து 148 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 37 ஆயிரத்து 504 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்த நிலையில், பலியானோர் எண்ணிக்கை 612 ஆக உயர்ந்தது.