தொடக்கத்திலேயே கண்டறிந்தால் கொரோனாவை குணப்படுத்தலாம் - மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த கொடூர கொரோனா அரசியல் தலைவர்கள், நடிகர்கள் என பிரபலங்களையும் விட்டுவைக்கவில்லை. அதன்படி, மத்திய பிரதேச பாஜக முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகானும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனாவிடம் சிக்கிய முதல் முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகானே ஆவார். கடந்த 25-ந்தேதி இவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அவர் உடனே போபாலில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அங்கு அவர் வேகமாக உடல்நலம் தேறி வருகிறார்.

இந்நிலையில் நேற்று மருத்துவமனையில் இருந்தவாறே காணொலி காட்சி மூலம் முதல் முறையாக தனது மந்திரிசபை கூட்டத்தை நடத்தி, தனது கொரோனா அனுபவங்களை சக மந்திரிகளுடன் பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய அவர், கொரோனா வைரஸ் குறித்து பதற்றமடைய தேவையில்லை. எச்சரிக்கையாக இருந்தாலே அதை கட்டுப்படுத்தி விடலாம் என்று கூறினார்.

மேலும் அவர், தற்போது எனது துணிகளை நானே துவைத்துக்கொள்கிறேன். மற்றவர்கள் செய்யக்கூடாது என்பதால் நானே துவைக்கிறேன். இதனால் கொஞ்ச நாட்களுக்கு முன் அறுவை சிகிச்சை செய்து கொண்ட எனது கைக்கும் சவுகரியமாக உள்ளது. எனது முட்டியும் சரியாக மடக்க முடிகிறது. எனக்கான தேநீரை நானே போட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்.