ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்தைக் கடந்தது

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை ஒரு கோடியை கடந்துள்ளது. மேலும் இதுவரை கொரோனா காரணமாக 5 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்கா, பிரேசில், இந்தியாவைத் தொடர்ந்து ரஷ்யாவிலும் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளது. உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் ரஷ்யா 4-வது இடத்தில் உள்ளது. தற்போது, ரஷ்யாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்தைக் கடந்துள்ளது.

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6 ஆயிரத்து 562 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 லட்சத்து 792 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 173 பேர் பலியாகினர்.

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 667 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 4.72 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் மூன்றாவது இடத்திலிருந்த ரஷ்யாவை இந்தியா பின்னுக்கு தள்ளி 3-வது இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.