விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் 543 பேருக்கு கொரோனா உறுதி

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இருப்பினும் குணமடைவோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 34 ஆயிரத்து 114 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையை தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 56,361 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 7,637 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது. 9,409 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. இதில் 4,331 பேர் இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 6 சிறப்பு தனிமைப்படுத்தும் மையங்களில் 143 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 543 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,180 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து நகர்புறத்தை விட கிராமங்களிலேயே அதிக பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவதில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை. தொடர்ந்து தாமதம் ஆகும் நிலையே இருந்து வருகிறது. தாமதத்தை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 5 பேர் பலியாகி உள்ளனர். ஆதலால் மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது.