சீனா நினைத்திருந்தால் கொரோனா பரவாமல் தடுத்திருக்க முடியும்: அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு

சீனாவால் தடுத்திருக்க முடியும்... கொரோனா வைரஸ் உலக அளவில் பரவாமல் சீனாவால் தடுத்திருக்க முடியும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார்.

வைரஸ் பரவல் குறித்து, டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் வைத்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்திருந்தார். அவர் கூறுகையில், “கொரோனா பரவல் விடயத்தில் சீனா வெளிப்படையாக நடந்துகொள்ளவில்லை. சீனா நினைத்திருந்தால் வெளிநாடுகளுக்குப் பரவாமல் தடுத்திருக்க முடியும். ஆனால், வைரஸ் பரவுவதைத் தடுக்கக் கூடாது என்ற முடிவை சீனா எடுத்திருக்கிறது.

சீனாவின் வுஹான் நகரில்தான் முதலில் கொரோனா பரவியது. ஆனால், ஏனைய நகரங்களுக்குப் பரவ விடாமல் சீனா பார்த்துக் கொண்டது. அதேநேரத்தில் சீனாவை விட்டு உலக நாடுகளுக்கு கொரோனா பரவ விட்டுவிட்டது” என்று தெரிவித்தார்.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா தொற்றினால் உலகம் முழுவதும் ஒன்றரை கோடி பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதுடன் 6 இலட்சத்துக்கும் அதிகமானோர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.