தமிழகத்தில் 1000ஐ கடந்தது .. கொரோனா பாதிப்பு

தமிழகம்: தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் எண்ணிக்கை 1000ஐ தாண்டி பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்துள்ளது.

இதில் 330 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.24 பேர் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இப்போது அதிகரித்து வரும் நோய்த்தொற்றை கருத்தில் கொண்டு ஒவ்வொரு மாவட்டங்களில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் 200 படுக்கை வசதிகளை தயாராக வைத்திருக்கும் படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்த வசதிகள் அனைத்து மாவட்டங்களிலும் தயாராக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய் தடுப்பு நடவடிக்கைகளை கவனத்தில் கொள்கையில், தமிழகம் முழுவதும் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, கடந்த 3 வாரங்களுக்கு முன் 10 ஆயிரம் என்ற நிலையில் இருந்த கொரோனா தினசரி பரிசோதனைகள் இப்போது 25,000 என அதிகரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், திரையரங்குகள், மண்டபங்கள் ஆகியவற்றில் கட்டாயம் முகக்கவசத்தை அணிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் பாதிப்புகள் கணிசமாக உயர்ந்து வரும் நிலையில், அங்கு நோய்த்தடுப்பு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அம்மாவட்டத்தில் மட்டும் தினசரி கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 70ஐ தாண்டி பதிவு செய்யப்பட்டுள்ளதால் மக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும் என்றும் கட்டாயம் முகக்கவசங்களை அணிந்திருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.