காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 100 ஆக உயர்வு

காஞ்சீபுரம் மாவட்டம் முழுவதும் இதுவரையில் 8 ஆயிரத்து 17 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. மாநிலத்தில் நோய் தொற்று பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 20 ஆயிரத்து 716 ஆக அதிகரித்துள்ளது. 3 ஆயிரத்து 571 பேர் சிகிச்சை பலனின்றி கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 95,857 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், தேனி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சி பகுதியை சேர்ந்த 21 மற்றும் 24 வயது வாலிபர்கள், மாடம்பாக்கம் ஊராட்சி பகுதியை சேர்ந்த 37 வயது ஆண், ஒரத்தூர் பகுதியை சேர்ந்த 40 வயது பெண், மணிமங்கலம் அருகே 26 வயது இளம்பெண் ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இவர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 223 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளானார்கள். மாவட்டம் முழுவதும் இதுவரையில் 8 ஆயிரத்து 17 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 4,853 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 3 ஆயிரத்து 64 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 6 பேர் இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 100 ஆனது.