பிரான்ஸில் இருந்து ராமேசுவரத்திற்கு சுற்றுலா வந்தவருக்கு கொரோனா பாதிப்பு

பிரான்ஸ் நாட்டில் இருந்து ராமேசுவரத்திற்கு சுற்றுலா வந்தவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரான்சு நாட்டில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் ராமேசுவரத்திற்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் கப்பல் மூலம் இந்தியா வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவர்கள் 5 பேரும் பிரான்சு நாட்டு பதிவு எண் கொண்ட காரில் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா சென்றுவிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமேசுவரம் வந்தனர். இவர்களில் குடும்பத்தலைவரான 44 வயது நபருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது.

இதனை தொடர்ந்து அவர்கள் அனைவரும் மண்டபத்தில் கடந்த 9-ந் தேதி கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். இதில் அந்த குடும்பத்தலைவருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இது குறித்த தகவல் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நேற்று காலை 5 பேரும் பிரான்சு நாட்டு காரில் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அங்கு தொற்றுக்கு உள்ளான அந்த குடும்ப தலைவரை மட்டும் கொரோனா வார்டில் அனுமதித்துவிட்டு மற்றவர்கள் மீண்டும் ராமேசுவரம் புறப்பட்டு சென்றனர். மேலும் அவரது குடும்பத்தினர் அனைவரையும் தனிமைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.