நோக்கியா நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கொரோனா; தொழிற்சாலையை மூட உத்தரவு

சென்னையை அடுத்த ஒரகடத்தில் இயங்கி வரும் நோக்கியா சொல்யுஷன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் மூடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 11 ஆயிரத்திற்கு மேல் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. அதிலும் சென்னையில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் 50 சதவீதத்திற்கு மேற்பட்ட கொரோனா பாதிப்பு சென்னையில்தான் இருந்தது.

4ஆவது லாக்டவுன் நீட்டிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் பெரும்பாலான கட்டுப்பாடுகளில் தளர்வுகள் வழங்கியுள்ளன. எனினும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தொடரும் என அரசு தெரிவித்துள்ளது.

சென்னையை அடுத்த ஒரகடத்தில் உள்ள நோக்கியா சொல்யுஷன்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. செல்போன்களுக்கு உதிரி பாகங்கள் தயார் செய்யும் இந்த நிறுவனத்தில் ஏராளமானோர் பணியாற்றி வருகிறார்கள்.

இந்த நிலையில் இங்கு 12 பேருக்கு கொரோனா தொற்று ஏற்கனவே உறுதியானது. தற்போது மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் உத்தரவின் பேரில் நோக்கியா நிறுவனம் மூடப்பட்டுள்ளது.