கொரோனாவால் உலக அளவில் மேலும் 15 கோடி குழந்தைகள் வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர்

கொரோனாவுக்கு பிந்தைய குழந்தைகள் நிலை குறித்து 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப்பும், ‘குழந்தைகளை பாதுகாப்போம்’ என்ற தொண்டு நிறுவனமும் இணைந்து ஆய்வு நடத்தின. இந்த ஆய்வில் கொரோனா தொடங்கியது முதல் உலக அளவில் கல்வி, வீடு, ஊட்டச்சத்து, சுகாதாரம் அல்லது தண்ணீர் போன்ற அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் மேலும் 15 கோடி குழந்தைகள் வறுமையில் தள்ளப்பட்டிருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

இதனால், மேற்படி வசதிகள் இல்லாமல் வறுமையில் வாடும் குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் 120 கோடியாக உயர்ந்திருப்பதாக யுனிசெப் நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. இதில் 45 சதவீத குழந்தைகள் மேற்படி அத்தியாவசிய தேவைகளில் ஒன்றுகூட கிடைக்காமல் அவதிப்படுவதாகவும் யுனிசெப் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதுகுறித்து யுனிசெப் நிர்வாக இயக்குனர் ஹென்ரியட்டா கூறுகையில், கொரோனாவும், அது பரவலை கட்டுப்படுத்த போடப்பட்ட ஊரடங்கும், கோடிக்கணக்கான குழந்தைகளை வறுமையின் ஆழத்துக்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் தொண்டு நிறுவன தலைமை செயல் அதிகாரி இங்கர் ஆஷிங் இதுகுறித்து கூறுகையில், கொரோனா தொற்று உலக கல்வியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக கூறியுள்ள குழந்தைகளை பாதுகாப்போம். கல்வி கிடைக்காததால் குழந்தை தொழிலாளர் முறை மற்றும் குழந்தை திருமணம் அதிகரிக்கும். இதனால் வறுமை சுழற்சியில் அவர்கள் சிக்கி விடுவார்கள் என அச்சம் தெரிவித்துள்ளார்.