பாஜக மூத்த தலைவர் உமா பாரதிக்கு கொரோனா பாதிப்பு

உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. கொரோனா பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்படும் நிலையில், பாதிப்பு எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. பொதுமக்கள் மட்டுமின்றி, அரசியல் தலைவர்கள், காவல்துறையினர், மருத்துவர்கள் உள்ளிட்ட பொதுப்பணிகளில் இருப்பவர்களும் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர்.

அண்மையில் பாஜக மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷா கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு குணமடைந்து வீடு திரும்பினார். தற்போது பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான உமா பாரதிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 59,92,533 ஆக உயர்ந்துள்ளது.

உமா பாரதி தனது டுவிட்டர் பக்கத்தில், தனக்கு கடந்த 3 நாட்களாக லேசான காய்ச்சல் இருந்ததாகவும், மருத்துவ பரிசோதனையில் தனக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தன்னைச் சார்ந்தவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும்படி உமா பாரதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் அருகே உமா பாரதி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும், மீண்டும் நான்கு நாட்கள் கழித்து இன்னொரு முறை பரிசோதனை செய்து கொள்ளப்போவதாகவும் கூறியுள்ளார். இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 1.58 சதவீதமாகவும், குணமடைந்தோர் விகிதம் 82.46 சதவீதமாகவும் உள்ளது.