கொரோனாவால் மும்பையில் பலியானவர்கள் எண்ணிக்கை சதவீதம் அதிகரிப்பு

உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு... மும்பையில் கொரோனா நோயாளிகளின் உயிரிழப்பு எண்ணிக்கை மூன்று சதவீதமாக இருந்த நிலையில் அது 5 புள்ளி 66 சதவீதமாக அதிகரித்துள்ளது.

மும்பை பெருநகர மாநகராட்சி இறந்தவர்களின் விவரங்களை மறு ஆய்வுக்குட்படுத்தியதில் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு இல்லாத மரணங்கள் என்று முன்பு நீக்கப்பட்டவை புதிதாகப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

இவ்வகையில் புதிதாக 862 மரணங்கள் கொரோனா பாதிப்பால் ஏற்பட்டதாக மாநகராட்சி மறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகள் தரும் தகவல்கள் தாமதமாவதாலும் முன்பு குறைந்த எண்ணிக்கையில் இருந்த மரணம் அடைந்தோரின் எண்ணிக்கை இப்போது இரட்டிப்பாக அதிகரித்து வருகிறது.

இந்தியாவை பொறுத்தவரையில் மகாராஷ்டிராவில்தான் கொரோனா பாதிப்புகள் அதிகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பலியானவர்களின் எண்ணிக்கையும் இங்கு அதிகம். இந்நிலையில் மகாராஷ்டிராவில் வரும் ஜுலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.