வேலூர் மாவட்டதில் அரசு மருத்துவமனை டாக்டர் உட்பட 170 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,99,749 ஆக உயர்ந்துள்ளது. சென்னையை தொடர்ந்து தற்போது அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது.

வேலூர் மாவட்டதிலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. அதை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தினமும் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரிசோதனை மேற்கொண்டவர்கள் குறித்த பட்டியல் தினமும் வெளியிடப்படுகிறது. அதன்படி நேற்று காலை பாதிக்கப்பட்டவர்களின் விவரம் வெளியிடப்பட்டது. அதில் ஒரேநாளில் 170 பேருக்கு பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

அதன்படி வேலூர் சலவன்பேட்டை, ஓல்டுடவுன், விருதம்பட்டு, காட்பாடி, கழிஞ்சூர், சேண்பாக்கம் போன்ற மாநகராட்சி பகுதிகளில் மட்டும் சுமார் 80 பேர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

சத்துவாச்சாரி கோர்ட்டில் பணியாற்றும் சார்பு நீதிபதி ஒருவர், காந்தி ரோட்டில் 3 தங்கும் விடுதி ஊழியர்கள், அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை டாக்டர், போலீஸ் குடியிருப்பில் ஒருவர், கன்டோன்மென்ட் ரெயில் நிலைய ஊழியர்கள் 2 பேர், பென்லேன்ட் மருத்துவமனை பணியாளர்கள் 2 பேர், ஜெயில் குடியிருப்பில் ஒருவர், ஆயுதப்படை குடியிருப்பில் காவலர் ஒருவர் மற்றும் குழந்தைகள், சிறுவர், சிறுமிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குடியாத்தம் பகுதியில் வங்கியில் பணிபுரிபவர்களுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் வேலூர் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 4,763 ஆக உயர்ந்துள்ளது.

பாதிக்கப்பட்ட அனைவரும் கொரோனா சிறப்பு முகாம்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களுடன் பழகியவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. அவர்கள் வசித்த பகுதிகளில் சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.