கவர்னர் மாளிகையில் 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கவர்னர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 86 ஆயிரத்து 492 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 51 ஆயிரத்து 765 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், நோய் பாதிப்பில் இருந்து மாநிலத்தில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 583 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு 2 ஆயிரத்து 700 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 89,561 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் (சி.ஆர்.பி.எப்.) பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். அவர்களில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையொட்டி அங்கு பணியில் இருந்த 147 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. பரிசோதனை முடிவில் 84 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.