மதுரையில் அதிகளவில் கொரோனா பாதிப்பு குறைந்தது

மதுரையில் கொரோனா பாதிப்பு அதிகளவில் குறைந்து வருகிறது. ஜூன், ஜூலை மாதங்களில் தினமும் 300, 400 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதன்பின்னர் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைய தொடங்கியது. தற்போது நாளொன்றுக்கு 30-க்கும் குறைவான நபர்களே கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள்.

அதுபோல், அதிக நபர்கள் குணம் அடைந்து வீட்டிற்கு செல்வதால் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. தினமும் 6 ஆயிரம் பேர் வரை சிகிச்சையில் இருந்த அரசு ஆஸ்பத்திரியில் தற்போது 150-க்கும் குறைவான நபர்களே சிகிச்சையில் இருக்கிறார்கள். அந்த அளவிற்கு பாதிப்பும் குறைந்துள்ளது.

இந்தநிலையில், மதுரையில் நேற்று கொரோனாவால் 20 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 16 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதமுள்ள 4 பேர் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். இதனுடன் சேர்த்து மதுரையில் 19 ஆயிரத்து 637 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுபோல், நேற்று கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற வந்த 18 பேர் குணம் அடைந்தனர். அவர்களுடன் சேர்த்து மதுரையில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 975 ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர தற்போது மருத்துவமனைகளில் 224 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.