கொரோனா கர்ப்பிணி பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததால் மருத்துவமனைக்கு வெளியிலேயே பிறந்த குழந்தை

காஷ்மீர் மாநிலம் பாண்டிபோரே மாவட்டம் வேவான் கிராமத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் பாண்டிபோரேவில் உள்ள ஆஸ்பத்திரியில் அந்த பெண்ணை அவரது குடும்பத்தினர் சேர்த்தனர். மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா இருப்பதற்கான பாசிடிவ் முடிவு வந்தது. கர்ப்பிணி பெண்ணுக்கு கொரோனா இருப்பதால், சிகிச்சை அளிக்க டாக்டர்கள் மறுத்தனர்.

பின்னர் அங்கிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹாஜின் பகுதியில் உள்ள கோவிட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறினார்கள். பிரசவ வலி அதிகமானதால், அங்கேயே சிகிச்சை அளிக்குமாறு அவரது குடும்பத்தினர் கெஞ்சியும் டாக்டர்கள் சிகிச்சை அளிக்க மறுத்தனர். பின்னர் அவரை அங்கிருந்து வெளியேற்றினர். இதனால் அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு மருத்துவமனைக்கு வெளியிலேயே திறந்தவெளியில் குழந்தை பிறந்தது.

அங்கிருந்தவர்கள் போர்வைகளை வழங்கி அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு உதவினார்கள். அங்குள்ள சில பெண்கள் பிரசவத்துக்கு உதவி புரிந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. டாக்டர்களின் இந்த செயலை கண்டித்து, அந்த பெண்ணின் குடும்பத்தை சேர்ந்தவர்களும், உள்ளூர் வாசிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதார அதிகாரி ஒருவர் கூறுகையில், இது மனிதாபிமானமற்ற செயலாகும். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. நோயாளியின் நிலைமை அறிந்தபோதிலும், கோவிட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறியது கண்டனத்துக்குரியது. குற்றம் சாட்டப்பட்ட டாக்டர்களின் சம்பளத்தை நிறுத்திவைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.