சீன நகரில் அறிகுறியே இல்லாமல் பலருக்கு கொரோனா உறுதி

சீன நகரம் ஒன்றில் அறிகுறியே இல்லாமல் பலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், அந்நகரின் ஒட்டுமொத்த மக்கள் தொகையான 47 லட்சம் பேருக்கும் 3 நாட்களுக்குள் கொரோனா பரிசோதனை செய்யும் பணியில் அரசு இறங்கியுள்ளது. கொரோனா வைரஸ் சீனாவின் ஹூபெய் மாகாணம் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றியது. அதன்பின் இந்த வைரஸ் நாடு விட்டு நாடு, கண்டம் விட்டு கண்டம் கடந்து தற்போது ஒட்டுமொத்த உலகத்திலும் பரவி கிடக்கிறது.

ஆனாலும் அதன்பின், கொரோனாவின் பிறப்பிடமான சீனா அதன் பாதிப்பில் இருந்து பெருமளவு மீண்டுவிட்டது. கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் சீனா மிகப்பெரிய வெற்றியை கண்டிருந்தாலும், அங்கு கொரோனா பாதிப்பு முழுமையாக நீங்கிவிடவில்லை. சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள ஜின்ஜியாங் மாகாணம் காஷ்கர் நகரில் ஆடை தொழிற்சாலையில் வேலை பார்க்கும் இளம்பெண் ஒருவருக்கு கடந்த சனிக்கிழமை அறிகுறிகளே இல்லாமல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதன்பின், அந்த இளம் பெண்ணுடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதனை செய்ததில் 137 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் காஷ்கர் நகரின் மொத்த மக்கள் தொகையான 47 லட்சம் பேருக்கும் 3 நாட்களில் கொரோனா பரிசோதனை செய்ய மாகாண அரசு முடிவு செய்தது. நகரம் முழுவதும் பல்வேறு இடங்களில் கொரோனா பரிசோதனை மையங்கள் திறக்கப்பட்டு இரவு, பகலாக பரிசோதனை நடந்து வருகிறது.

நேற்று முன்தினம் மதியம் வரை 28 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதில் அவர்கள் அனைவருக்கும் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. எஞ்சிய 19 லட்சம் பேருக்கும் நாளைக்குள் கொரோனா பரிசோதனை நடத்தி முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்படும் வரை மக்கள் யாரும் நகரை விட்டு வெளியேறக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.