கொரோனா ஊரடங்கால் தொழில் பாதிக்கப்பட்டு கூடை பின்னும் வழக்கறிஞர்

கொரோனா ஊரடங்களால் கூடை பின்னும் தொழில் செய்து வருகிறார் வழக்கறிஞர் ஒருவர்.

புதுக்கோட்டையில் வழக்கறிஞராக பணிபுரியும் உத்தமகுமரன் என்பவர் கொரோனா ஊரடங்கால் தனது குடும்ப தொழிலான கூடை பின்னும் தொழிலுக்கு தள்ளப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் உத்தமகுமரன் என்பவர் வழக்கறிஞராக பணி புரிந்து வந்துள்ளார். அவருக்கு திருமணம் முடிந்து ஒரு மகனும் உள்ளார். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கால் நீதிமன்றங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் சிறிய வழக்குகளில் வாதாடும் வக்கீல்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. உத்தம குமரனின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

மாதம் ரூ.25,000 வரை சம்பாதித்து வந்த குமரன் எந்த வருமானமும் இல்லாமல் தவித்துள்ளார். மேலும் அவருடைய மனைவி மற்றும் மகனின் உணவிற்கும் என்ன செய்வது என்று தெரியாமலும் தவித்துள்ளனர். இதனால் வேறு வழியின்றி, அவருடைய மூதாதையர்கள் பரம்பரையாக பார்த்து வந்த குடும்ப தொழிலான கூடைபின்னும் தொழில் இறங்கியுள்ளார்.

இது குறித்து உத்தமகுமரன் கூறும்போது, தனக்கு வக்கீல் வேலையும், அதைத்தவிர முன்னோர்கள் செய்த கூடை பின்னும் வேலையும் தான் தெரியும் என தெரிவித்துள்ளார். மேலும் கூடை பின்னுதல் மூலம் வாரம் ரூ. 1200 முதல் ரூ.1500 வரை வருமானம் வருவதாக தெரிவித்துள்ளார்.

வழக்கறிஞர் உத்தமகுமரனை குறித்து ஆங்கில நாளேடு ஒன்று கடந்த மாதம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியை படித்த சத்தீஸ்கர் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, பி.ஆர். ராமசந்திர மேனன் என்பவர் ரூ.10,000 காசோலையை பரிசாக அனுப்பி வைத்துள்ளார். இது இரக்கத்தினால் கொடுக்கப்படும் நன்கொடை அல்ல. மாறாக உங்களை பாராட்டுவதற்காக கொடுக்கப்படும் பரிசு எனவும் தெரிவித்து ஒரு கடிதமும் அனுப்பியுள்ளார்.

தங்கள் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு படித்து, முதல் தலைமுறை பட்டதாரிகளாகி சமுதாயத்தில் முன்னுக்கு வந்த ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையை இந்த கொரோனா ஊரடங்கு முற்றிலும் புரட்டிப்போட்டுள்ளது.