தமிழகத்தில் 45 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை; முதல்வர் தகவல்

கொரோனா பேரிடரைக் கையாளும் வகையில் சுமார் 15 ஆயிரம் பேர் கூடுதலாக சுகாதாரத் துறையில் பணியமர்த்தப்பட்டு உள்ளனர், தமிழகத்தில் இதுவரை 45 லட்சம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

கொரோனா காரணமாக தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட 7-அம் கட்ட பொதுமுடக்கம் ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி துவக்க உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் இதுவரை 45 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

ஒரு நாளைக்கு 75 ஆயிரம் பரிசோதனைகள் நடத்தப்படுகிறது. கொரோனா சிகிச்சைக்கு ஐசிஎம்ஆர் பரிந்துரைத்த மருந்துகள் போதுமான அளவில் அரசு மருத்துவமனைகளில் கையிருப்பில் உள்ளது.

கொரோனா பாதித்தவர்களில் 85.45 சதவீதம் பேர் குணமடைந்து உள்ளனர். நாட்டிலேயே தமிழகத்தில்தான் கொரோனா உயிரிழப்பு குறைவாக உள்ளது. தமிழகம் முழுவதும் பொதுவிநியோகக் கடைகள் மூலம் இலவசமாக முகக்கவசங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பொதுமுடக்கக் காலத்தில் 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.