ஜனாதிபதி மாளிகையில் பணியில் இருந்து உதவி போலீஸ் கமிஷனருக்கு கொரோனா பாதிப்பு

ஜனாதிபதி மாளிகையான ராஷ்டிரபதி பவனில் பணியில் இருந்த உதவி போலீஸ் கமிஷனர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இன்று முதல் இந்தியா நான்காம் கட்ட ஊரடங்கில் நுழைந்துள்ளது. மார்ச் 25-ம் தேதி முதல் தற்போது வரை மூன்று கட்டங்களாக சுமார் 50-க்கும் மேற்பட்ட நாள்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

ஆனால் நான்காம் கட்ட ஊரடங்கு முன்னர் இருந்ததைப் போல் இல்லாமல் மாறுபட்டதாக இருக்கும் என சமீபத்தில் நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் மோடி கூறியிருந்தார். அதன்படி பல்வேறு விதிமுறைகளுடன் கூடிய நான்காம் கட்ட ஊரடங்கு இன்று முதல் அமுலாகியுள்ளது.

இதற்கிடையில் ஜனாதிபதி மாளிகையான ராஷ்டிரபதி பவனில் பணியில் இருந்த உதவி போலீஸ் கமிஷனர் ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. இவருடன் பணிபுரிந்த மற்ற ஐந்து பேர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கிழக்கு டெல்லியின் கர்கார்டூமாவில் உள்ள ஒரு அரசு வீட்டுவசதி காலனியில் ஏசிபி வசித்து வருகிறார்.

மேலும் தினமும் ராஷ்டிரபதி பவனுக்கு சென்று வருவார் என்பதால் அந்தப் பகுதிகள் தற்போது கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருகிறது. 2.5 கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதியின் குடியிருப்பு மற்றும் அலுவலகம், ஒரு அருங்காட்சியக வளாகம் மற்றும் புகழ்பெற்ற தோட்டங்கள் (முகலாய தோட்டம், மூலிகை தோட்டம், இசை தோட்டம் மற்றும் ஆன்மீக தோட்டம் ஆகியவை அடங்கும்), ஆகியவைகளுடன் ஊழியர்களுக்கு தங்குமிடமும் உள்ளது.

இதில் கொரோனா தொற்றுக்கு உள்ளான, ஏ.சி.பி.யின் அலுவலகம் ராஷ்டிரபதி பவனின் பிரதான கட்டிடத்தில் இருக்கிறது என்றாலும், ​​அது ஜனாதிபதியின் செயலகத்திலிருந்து விலகியே இருக்கிறது.

எனினும் அப்பகுதி முழுவதுமே கிருமிநாசினி தெளிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இவருக்கு எப்படி கொரோனா தொற்று வந்ததது என்ற டிராக் ஹிஸ்டரியையும் அதிகாரிகள் தேடி வருகின்றனர். கடந்த மாதம், ராஷ்டிரபதி பவனின் தூய்மைப் பணியாளர் ஒருவரின் தாயார் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.

இதையடுத்து ராஷ்டிரபதி பவனின் பணியாளர்களான 115 பேரின் குடும்பங்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.