தமிழகம் முழுவதும் 450 போலீஸாருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 31,667 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 1,156 பேருக்கு கொரோனா வைரசால் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 16,395 இல் இருந்து 16,999 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு எண்ணிக்கை 269ஆக அதிகரித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு பணியில் போலீசார் முன்வரிசையில் நின்று பணி செய்து வருகின்றனர். இதன் காரணமாக தமிழகம் முழுவதும் 450 போலீஸார் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

கடந்த 73 நாட்களில் ஊரடங்கை மீறி சாலையில் சுற்றித் திரிந்ததாக 5 லட்சத்து 53,431 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 5 லட்சத்து 94,681 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். 4 லட்சத்து 53,050 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 10 கோடியே 68 லட்சத்து 13,234 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

போலீஸாருக்கும் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால், போலீஸார் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் ஐபிஎஸ் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை சுமார் 300 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 450 போலீஸாருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.