விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாநில மற்றும் மாவட்ட நிர்வாகம் பரிசோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் வரை 2 லட்சத்து 56 ஆயிரத்து 689 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் 15 ஆயிரத்து 846 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 2 ஆயிரத்து 537 பேரின் பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை.

14 ஆயிரத்து 447 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். முகாமில் 6 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 130 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்து 894 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் முதல்-அமைச்சர் வருகையையொட்டி நடைபெற இருந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக கலெக்டர் அலுவலக ஊழியர்கள் 200 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள், ஊழியர்கள் என 18 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

எனவே நோய் தொற்று ஏற்பட்டுள்ள அந்த 18 பேருடன் பணியாற்றிய பிற ஊழியர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் மருத்துவ பரிசோதனை செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது.