காணாமல் போனதாக கூறப்பட்ட கொரோனா நோயாளி கழிவறையில் சடலமாக கண்டெடுப்பு

மகாராஷ்ட்ராவில் உள்ள மருத்துவமனையில் காணாமல் போனதாக கூறப்பட்ட கொரோனா நோயாளி சடலமாக கழிவறையில் கண்டெடுக்கப்பட்ட அவலம் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக ஜில்லாபெத் காவல் நிலைய மூத்த ஆய்வாளர் அக்பர் படேல் தெரிவித்துள்ளதாவது:

ஜல்கான் மாவட்டம் புசாவல் பகுதியைச் சேர்ந்த 82 வயது மூதாட்டி ஒருவருக்கு கடந்த மாதம் 27-ஆம் தேதி கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. முதலில் வேறொரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து அவர், பின்னர் ஜல்கான் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்த அவரை கடந்த 2-ஆம் தேதி முதல் காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் மற்றும் மருத்துவமனை தரப்பில் இருந்து தகவல் அளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக புசாவல் பகுதியில் விசாரணை, மருத்துவமனை பதிவேடுகளை சோதித்தல் மற்றும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தல் ஆகிய நடைமுறைகளுக்குப் பிறகு, ஜூன் 6-ஆம் தேதியன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் அந்த மருத்துவமனையில் கழிவறை ஒன்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக வந்த தகவலையடுத்து, அங்கு சென்று சோதனை செய்த போது அந்த மூதாட்டியின் உடல் அங்கிருந்து கண்டெடுக்கப்பட்டது. அவரது குடும்பத்திற்கு தகவல் அளித்துள்ளோம். மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் யார் என்பது குறித்து விசாரித்து, அலட்சியமாக செயல்பட்டவர்களுக்கு தகுந்த தண்டனை அளிக்கப்படவேண்டும் என்று, அந்த மூதாட்டியின் பேரன் வீடியோ வாயிலாக மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஒரு வார இடைவேளையில் இதுபோல ஒரு சம்பவம் நடப்பது மகாராஷ்ட்ராவில் இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது