திருத்தணி வருவாய் ஆர்.டி.ஓ. அலுவலகம் முற்றுகையிடப்பட்டதால் பரபரப்பு

ஆர்.கே.பேட்டை: தாக்குதல் சம்பவத்தில் விசாரணைக்கு வருமாறு அழைத்ததால் திருத்தணி வருவாய் ஆர்.டி.ஓ. அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. பின்னர் ஆர்டிஓ போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆர்.கே.பேட்டையை அடுத்த ராஜாநகரம் பகுதியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு ஆதி திராவிட பழங்குடியினத்தைச் சேர்ந்த 100 குடும்பங்களுக்கு அரசால் வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதே கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன், வருவாய் துறையினர், பலத்த போலீஸ் பாதுகாப்புடன், ஆதி திராவிட மக்களுக்கான நிலத்தை அளந்து, கற்களை நட்டனர். இதை கண்டித்து நடந்த போராட்டத்தில், வருவாய் துறை மற்றும் காவல் துறையினர் சிலர் கடுமையாக தாக்கப்பட்டனர்.

இதுகுறித்து, ராஜாநகரம் கிராமத்தைச் சேர்ந்த 42 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் ராஜாநகரம் கிராமத்தை சேர்ந்த 6 பேர் ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் திருத்தணி வருவாய் ஆர்.டி.ஓ. அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. பின்னர் ஆர்டிஓ போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஹஸ்ரத் பேகம் அழைப்பாளர்கள் வந்து உங்கள் கோரிக்கைகளை வழக்கறிஞர்களிடம் சமர்ப்பிக்கலாம் அல்லது நீதிமன்றத்தை அணுகலாம்.

விசாரணைக்கு அழைக்கப்பட்ட 6 பேரின் சம்மனை ரத்து செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து மாவட்ட உயர் அதிகாரிகள் முடிவெடுக்க வேண்டும் என்றார். இதையடுத்து அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர். 4 மணி நேரத்திற்கும் மேலாக ஆர்.டி.ஓ. அலுவலகம் முற்றுகையிட்டதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது