1517 இடங்களுக்கு மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று நடைபெறுகிறது

இந்த வருடத்திற்கான மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை பெரிய மேட்டில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் கடந்த 18-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு, சிறப்பு கலந்தாய்வுக்கு பிறகு கடந்த ஒன்பது நாட்களாக பொது கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.

இன்றுடன் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு நிறைவு பெறுகிறது. நேற்று 591 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் 459 மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களில் 50 பேர் அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். இடங்களை பெற்றனர்.

சுயநிதி கல்லூரிகளில் 102 பேர் எம்.பி.பி.எஸ். இடங்களை தேர்வு செய்தனர். அரசு பல் மருத்துவ கல்லூரியில் 12 பேரும், தனியார் கல்லூரிகளில் 27 பேரும் பி.டி.எஸ். இடங்களை பெற்றனர். மொத்தம் 191 இடங்கள் நிரம்பின. இன்னும் அரசு கல்லூரிகளில் 317 எம்.பி.பி.எஸ். இடங்களும், 66 பி.டி.எஸ். இடங்களும் நிரப்பப்படாமல் உள்ளன. சுயநிதி கல்லூரிகளில் 212 எம்.பி.பி.எஸ். இடங்களும், 922 பி.டி.எஸ். இடங்களும் காலியாக உள்ளன.

இன்று 1517 இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. இதுவரை பொது கலந்தாய்வில் 2430 அரசு கல்லூரி எம்.பி.பி.எஸ். இடங்களும், 849 சுயநிதி கல்லூரி எம்.பி.பி.எஸ். இடங்களும் நிரம்பி உள்ளன. இந்த வருடம் பி.டி.எஸ். படிப்பில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டாததால் 988 இடங்கள் இன்னும் காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.