கொரோனா தொற்று குறையும் நாடுகள் விழிப்புடன் இருக்க எச்சரிக்கை

14 லட்சத்திற்கும் அதிகமானோர் பலி... உலக நாடுகள் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இத்தொற்றால் உலக அளவில் இதுவரை 6.08 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் இதுவரை 14 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனா பாதிப்பால் மரணமடைந்துள்ளனர். ஏற்கனவே பெரும் பாதிப்பை எதிர்கொண்ட ஐரோப்பிய நாடுகளில் தற்போது கொரோனா வைரசின் 2-வது அலை வீசி வருகிறது. அதேநேரம் உலகின் பல்வேறு நாடுகளில் பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வரும் நாடுகளுக்கு உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப தலைவர் மரியா வான் கெர்கோவ் கூறுகையில், கொரோனா வைரஸ் எண்ணிக்கை குறைந்து வரும் நாடுகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகளால் பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் கட்டுப்பாடுகளை தளர்த்திய பின்னர் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுவிடக் கூடாது. தொற்று பரவலை கட்டுப்படுத்தும் சக்தி நம்மிடம் தான் உள்ளது என்று தெரிவித்தார்.