மாற்று மருத்துவம் குறித்த வழக்கில் நீதிமன்றத்தின் உத்தரவு

சென்னை: மாற்று மருத்துவ சேவை குறித்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

அக்குபஞ்சர், எலக்ட்ரோபதி, யோகா போன்ற மாற்று மருத்துவம் செய்பவர்களின் உரிமையில் தலையிடுவதை தடுக்கும் வகையில், கடந்த 2015ல், இந்த மருத்துவ சேவை வழங்கும் 61 பேர், போலீசார் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர்களுக்கு மாற்று மருத்துவம் செய்ய தகுதி இல்லை என்றும், அவர்கள் படித்த டிப்ளமோ படிப்புக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவித்தார்.

தகுதி இல்லாத இவர்களை மருத்துவம் பார்க்கவைப்பது ஆபத்து என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, நாட்டில் மாற்று மருத்துவம் செய்யும் போது, தகுதியற்ற டாக்டர்கள் எந்த உரிமையும் கோர முடியாது என்றும், 6 மாத டிப்ளமோ படிப்பை வழங்கும் அங்கீகரிக்கப்படாத நிறுவனங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தங்களுக்கு சட்டப்படி செல்லுபடியாகும் சான்றிதழ்கள் இல்லை என்றும், தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யப்படவில்லை என்றும், எனவே மாற்று மருத்துவம் செய்ய உரிமை கோர முடியாது என்றும் மனுதாரர்களின் கோரிக்கையை தள்ளுபடி செய்தார்.

மேலும், பதிவு செய்யப்படாத மற்றும் அங்கீகாரம் பெறாதவர்கள் மாற்று மருத்துவத்தில் ஈடுபடுகிறார்களா என விசாரித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆணையர்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப டிஜிபிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.