சத்துணவு முட்டைகளை மாணவர்களுக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவு

மாணவர்களுக்கு முட்டைகள் வழங்க உத்தரவு... ஊரடங்குக்கு காரணமாக மாணவர்களுக்கு சத்துணவில் வழங்கப்படாமல் இருந்த முட்டைகளை வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. கொரானா தொற்று பரவி வருவதால் மாணவர்களை தினமும் பள்ளிகளுக்கு அழைத்து இலவச முட்டைகள் வழங்குவது பாதுகாப்பாக இருக்காது. இத்தகைய சூழலில் முட்டை கொள்முதல் செய்வதில் சில இடர்பாடுகள் இருப்பதாகவும் அரசு தரப்பு தெரிவித்தது.

ஆனால், சத்துணவுத் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு அரசு தொடர்ந்து முட்டை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதற்காக மாணவர்களின் பெற்றோர்களை பள்ளிக்கு அழைத்து முட்டைகள் வழங்கலாம் எனவும், முட்டைகளை தினம்தோறும் வழங்குவதா, அல்லது ஒரு வாரத்திற்கு மொத்தமாக வழங்குவதா? என்பன உள்ளிட்ட விஷயங்களை அரசே முடிவெடுத்துக் கொள்ளலாம் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மாணவிகளுக்கு சானிடரி நாப்கின் எப்படி விநியோகிப்பது என்பது குறித்தும் தமிழக அரசு முடிவெடுக்கலாம் என உத்தரவிடப்பட்டது.