குளித்தலை அருகே இனுங்கூரில் பயிர் காப்பீடு திட்ட விழிப்புணர்வு முகாம்

பயிர் காப்பீடு திட்ட விழிப்புணர்வு முகாம்... குளித்தலை வேளாண்மை துறை மூலமாக, பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம்-2020 விழிப்புணர்வு முகாம், இனுங்கூர் கிராமத்தில் நடந்தது.

கரூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சிவசுப்பிரமணியம் தலைமை வகித்தார். குளித்தலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அரவிந்தன் முன்னிலை வகித்தார். முகாமில், விவசாயிகளிடையே ஆரோக்கியமான கலந்துரையாடல் நடந்தது.

குளித்தலை வட்டார துணை வேளாண்மை அலுவலர் கணேசன், 'பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் நோக்கம், பயிர் காப்பீடு செய்வது, உழவர்கள் கடன் அட்டை பெற வேண்டிய அவசியம், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைப்பது' குறித்து விவாதித்தார்.

வேளாண்மை அலுவலர் பொன்னுசாமி, இனுங்கூர் வி.ஏ.ஓ., அருணாச்சலம் உள்பட விவசாயிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, உதவி வேளாண்மை அலுவலர்கள் அருள்குமார், தனபால், உழவர் உற்பத்தியாளர் குழு ஆறுமுகம், அறிவழகன், சரவணன் ஆகியோர் செய்திருந்தனர்.