கொரோனாவால் பாதிப்பு அடைந்த சி.ஆர்.பி.எப். வீரர்களின் எண்ணிக்கை 340 ஆக உயர்வு

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதில் குறிப்பாக பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனை மக்கள் எவ்வாறு முழுமையாக கடைப்பிடிக்கிறார்கள் என்பதை அந்தந்த நாடுகளின் ராணுவ வீரர்கள் மற்றும் போலீஸ்காரர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் கண்காணித்து வருகின்றனர்.

இந்தியாவின் மிகப்பெரிய துணை ராணுவமான மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (சி.ஆர்.பி.எப்.) பணியாற்றி வரும் வீரர் ஒருவருக்கு கடந்த மாதம் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. அவருக்கு எவ்வாறு பாதிப்பு ஏற்பட்டது என்று விசாரித்தபோது, மருத்துவ உதவியாளரான அவர் விடுமுறையில் இருந்து முகாமுக்கு திரும்பியது தெரியவந்தது. பின்னர் அவருக்கு சோதனை செய்ததில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, அந்த முகாமில் உள்ள அனைத்து வீரர்களும் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சோதனைக்காக தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் சி.ஆர்.பி.எப். சப்-இன்ஸ்பெக்டர் உள்பட மொத்தம் 300 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு உறுதியானது.

தற்போது, மேலும் 5 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதையடுத்து, கொரோனாவால் பாதிப்பு அடைந்த சி.ஆர்.பி.எப். வீரர்களின் எண்ணிக்கை 340 ஆனது. இதில் 125 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 213 பேர் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியுள்ளனர். 2 பேர் மட்டுமே பலியாகியுள்ளனர். இந்த செய்தி சி.ஆர்.பி.எப். செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.