மத்திய அரசை விமர்சனம் செய்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

புதுடெல்லி: எல்லைப் பிரச்னையில் சீனா தொடர்ந்து ஈடுபட்டு இந்தியாவை அச்சுறுத்தி வருகிறது.இதற்கு பதிலடியாக மோடி அரசு எதையும் செய்யாமல் உள்ளது என்று டெல்லி முதல்வர் குற்றம்சாட்டி உள்ளார்.

கடந்த 9ம் தேதி அருணாச்சல பிரதேச எல்லையில் சீன ராணுவத்தினர் ஊடுருவ முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் விரட்டியடித்தனர். இந்த மோதலில் சில இந்திய வீரர்கள் காயமடைந்தனர். இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசை விமர்சித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற ஆம் ஆத்மி கட்சியின் தேசியக் குழு கூட்டத்தில் பேசிய அவர், “எல்லைப் பிரச்னையில் சீனா தொடர்ந்து ஈடுபட்டு இந்தியாவை அச்சுறுத்தி வருகிறது.இதற்கு பதிலடியாக மோடி அரசு அந்த நாட்டை தண்டிக்காமல் வெகுமதி அளிக்கிறது. 2020-21 நிதியாண்டில் இந்தியாவிடமிருந்து 65 பில்லியன் டாலர் (ரூ.5.33 லட்சம் கோடி) மதிப்பிலான பொருட்களை சீனா வாங்கியது.

அடுத்த ஆண்டில் 95 பில்லியன் டாலர் (ரூ.7.79 லட்சம் கோடி) மதிப்பிலான பொருட்களை சீனாவிடம் இருந்து இந்தியா வாங்கியது. உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்காமல், சீனாவை நம்பியே மத்திய அரசு உள்ளது.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நடைமுறையில் பல பிரச்சனைகள் உள்ளன. ஆனால் எல்லாம் நன்றாக இருக்கிறது என்று மத்திய அரசு கூறியுள்ளது. “நமது ராணுவ வீரர்கள் மீது மத்திய அரசுக்கு அக்கறை இல்லை” என்று விமர்சித்தார்.