டில்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு மூச்சுத்திணறல்

அமைச்சருக்கு மூச்சுத்திணறல்... டில்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு நேற்று இரவு கடுமையான காய்ச்சல் மற்றும் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டில்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முன்னணியில் இருந்து கவனித்து வந்தார். கடந்த ஞாயிறன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்றார். பின்னர் முதல்வர் கெஜ்ரிவாலுடன் ஒரே காரில் இருவரும் பயணம் செய்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கடுமையான காய்ச்சல் மற்றும் மூச்சுவிடுவதில் சிரமத்தை உணர்ந்துள்ளார். அவரது ஆக்சிஜன் அளவும் குறைந்துள்ளது. உடனடியாக அவரை டில்லியிலுள்ள ராஜிவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த தகவலை சத்யேந்தர் ஜெயின் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அவரிடம் முதல் கட்டமாக கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. மூச்சு திணறலை குறைக்க சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.