டெல்லி காவல்துறை நடவடிக்கை குற்றவியல் நீதி முறையை "கேலிக்கு" ஆக்கி உள்ளது - ப.சிதம்பரம்

டெல்லியின் வடகிழக்கு பகுதிகளான ஜாஃப்ராபாத், ஷாகுர் பஸ்தி, சிவ் விஹார், சீலம்பூர் போன்ற பகுதிகளில் பிப்ரவரி 24-26 வரை பயங்கர கலவரம் நடைபெற்றது. இந்த கலவரத்தில் 53 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 581 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த குற்றப்பத்திரிக்கையில், சிபிஐஎம் தலைவர் சீதாராம் யெச்சூரி, சுவராஜ் அபியனின் யோகேந்திர யாதவ் மற்றும் பல அரசியல் தலைவர்களின் பெயரை சேர்த்து உள்ளது. இந்நிலையில் இதுகுறித்து மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் டெல்லி காவல்துறை நடவடிக்கை குற்றவியல் நீதி முறையை கேலிக்கு ஆக்கி உள்ளது என தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், தகவல் மற்றும் குற்றப்பத்திரிகைக்கு இடையில் விசாரணை மற்றும் உறுதிப்படுத்தல் எனப்படும் முக்கியமான படிகள் உள்ளன என்பதை டெல்லி காவல்துறை மறந்துவிட்டதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அவர், டெல்லி கலவர வழக்கில் துணை குற்றப்பத்திரிகையில் சீதாராம் யெச்சூரி மற்றும் பல அறிஞர்கள் மற்றும் ஆர்வலர்களை பெயரை சேர்ப்பதன் மூலம் டெல்லி காவல்துறை குற்றவியல் நீதி முறையை கேலிக்குள்ளாக்கியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.