டெங்கு .. தமிழக சுகாதாரத்துறை இயக்குனர் அனைத்து மாவட்டங்களுக்கும் முக்கிய உத்தரவு


சென்னை: தயார் நிலையில் அவசர கால குழு ... தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி மொத்தம் 1006 டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏடிஎஸ் கொசுக்களின் மூலமாக பரவும் டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கு தமிழக அரசு நிலையான வழிமுறைகளை சுகாதாரத் துறை மூலமாக பொதுமக்களுக்கு அறிவுறுத்தி கொண்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்து உள்ளார்.

வளிமண்டல சுழற்சி மாற்றத்தின் காரணமாக டெங்கு பாதிப்பு அதிகரிக்க கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் இனிவரும் மாதங்களிலும் நோய் பரவல் உயரும் வாய்ப்புகள் உள்ளதால் மருத்துவ கண்காணிப்பு குழுக்களின் மூலமாக தேவையான சிகிச்சைகளையும், கொசு ஒழிப்பு நடவடிக்கைகளையும் முறைப்படுத்த வேண்டும்.

மேலும் அவசரகால சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் வகையில் டெங்கு வார்டுகளில் படுக்கைகளையும், மருத்துவ உபகரணங்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.ரத்த வங்கிகளை போதிய இருப்புடன் பராமரிக்க வேண்டும்.

இதையடுத்து திடீர் சூழ்நிலைகளை சமாளிக்கும் வகையில் விரைவு உதவி குழுக்கள் அமைக்க வேண்டும். இவை தொடர்பான விவரங்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பது போன்ற உத்தரவுகள் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.