உடுமலை அருகே பாலைவன வெட்டுக்கிளிகள் படையெடுப்பா; வேளாண் அதிகாரிகள் ஆய்வு

பாலைவன வெட்டுக்கிளிகளா?... உடுமலை அருகே பாலைவன வெட்டுக்கிளிகள் படையெடுத்ததா? என அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். ஆய்வின் முடிவில் அது வதந்தி என்று தெரிய வந்துள்ளது. இதை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உலகமெங்கும் கொரோனாவுக்கு அடுத்தபடியாக அதிகம் பேசப்பட்ட விஷயமாக பாலைவன வெட்டுக்கிளிகள் உள்ளது. லோகஸ்ட் எனப்படும் இந்தவகை வெட்டுக்கிளிகள் ஒரு நாளைக்கு 150 கிலோ மீட்டர் வரை பறக்கும் தன்மை கொண்டவை. ஆப்பிரிக்காவில் தாக்குதலைத் தொடங்கிய இந்த வெட்டுக்கிளிகள் ஏமன்,ஈரான்,சோமாலியா வழியாக பாகிஸ்தானுக்குள் நுழைந்து அங்கிருந்து இந்தியாவிற்குள் நுழைந்தது.

அங்கு பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்களை தின்று தீர்த்த இந்த வெட்டுக்கிளிகள் தமிழகத்துக்கு வருவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று அரசும்,ஆய்வாளர்களும் உறுதி கூறினர். இந்த நிலையில் நேற்று உடுமலையை அடுத்த தும்பலப்பட்டி பகுதியில் ஒரு தோட்டத்தில் ஆயிரக்கணக்கான பாலைவன வெட்டுக்கிளிகள் படையெடுத்ததாக தகவல் பரவியது. இதனையடுத்து உடுமலை வேளாண்மை உதவி இயக்குனர்(பொ) திருமகள் ஜோதி தலைமையிலான வேளாண் குழுவினர் அந்த பகுதியில் ஆய்வு செய்தனர்.

இதில் அது பாலைவன வெட்டுக்கிளிகள் இல்லை என்பது தெரியவந்தது. இதுகுறித்து வேளாண்மை உதவி இயக்குனர் திருமகள் ஜோதி கூறியதாவது:-

தும்பலப்பட்டி பகுதியிலுள்ள ஒரு தோட்டத்தில் மாட்டுத் தீவனத்துக்காக நெருக்கமாக மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர். அந்த பகுதியைச் சுற்றி பல கிலோமீட்டர்கள் தூரத்துக்கு சாகுபடி எதுவும் செய்யப்படவில்லை. இதனால் சுற்றிலுமுள்ள வெட்டுக்கிளிகள் இந்த தோட்டத்துக்கு வந்துள்ளது. இவை இயல்பாக நமது பகுதியில் காணப்படும் வெட்டுக்கிளிகள் தான்.

எனவே விவசாயிகள் இதுகுறித்து அச்சப்படத் தேவையில்லை. இருப்பினும் இந்த வெட்டுக்கிளிகள் ரகம், கட்டுப்படுத்தும் முறை குறித்து வேளாண் பல்கலைக்கழக நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளோம். பாலைவன வெட்டுக்கிளிகள் என்று தகவல் பரவியது வதந்தி என்று கூறினார். இந்த ஆய்வின்போது வேளாண்மை அலுவலர் அறிவுமதி, உதவி வேளாண்மை அலுவலர் முருகானந்தம் ஆகியோர் உடனிருந்தனர்.