கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தி தெரியாது போடா டி ஷர்ட் வைத்திருந்தாரா ?

கனிமொழி எம்பி சென்னை விமான நிலையம் சென்றபோது பெண் பாதுகாவலர் ஒருவர் இந்தி தெரியாததால் இந்தியரா? என கேள்வி கேட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் இதற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரே குரலாக எதிர்ப்பு தெரிவித்தன. பின்னர் இயக்குனர் வெற்றிமாறனுக்கு இதே போன்ற சம்பவம் எழுந்துள்ளது.

இந்த சம்பவங்களுக்கு பின், இந்தி தெரியாது போடா மற்றும் நான் தமிழ் பேசும் இந்தியன் என்பது போன்ற வாசகம் அடங்கிய டி ஷர்ட்களை அணிந்து கொள்ளும் வழக்கம் தமிழர்கள் மத்தியில் புது டிரெண்ட் ஆகி இருக்கிறது. பலரும் இந்த வாசகம் அடங்கிய டி ஷர்ட்களை அணிந்து தங்களது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தி தெரியாது போடா எனும் வாசகம் அடங்கிய டி ஷர்ட்டை கையில் வைத்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் அந்த பதிவில், தமிழுக்கும் தமிழர்களுக்கும் பிரச்சனை என்றால் சும்மா இருக்க மாட்டேன் எனும் வாசகம் அமைந்துள்ளது.

இதுகுறித்து ஆய்வு செய்தபோது, அது போட்டோஷாப் மூலம் எடிட் செய்யப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உண்மையில், அந்த டி ஷர்ட் தடுப்பு மருந்துகளை ஆதரிப்பது போன்ற வாசகம் கொண்டது ஆகும். இந்த டி ஷர்ட் தனக்கு பிடித்து இருப்பதாக ஜஸ்டின் ட்ரூடோ தனது ட்விட்டரில் பதிவேற்றம் செய்து இருந்தார். அதன்படி, வைரலாகும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ புகைப்படம் போட்டோஷாப் மூலம் மாற்றப்பட்டது என தெரிய வந்துவிட்டது.